RightClick

சகல செல்வத்தை அள்ளித்தரும் ஶ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் - அய்யா சகஸ்ரவடுகர் !!!

ஓம் ஶ்ரீ அண்ணாமலையாரே போற்றி !!! 

ஓம் ஶ்ரீ குகை நமச்சிவாயரே போற்றி !!! 

ஓம் ஶ்ரீ குரு நமச்சிவாயரே போற்றி !!! 

ஓம் ஶ்ரீ ரமண மகரிஷி அய்யாவே போற்றி !!! 

ஓம் ஶ்ரீ சேஷாத்திரி சுவாமிகளே போற்றி !!! 


சொர்ணாகர்ஷண கிரிவலம் : 

(சொர்ணம் - செல்வம் ) = இறைவழியில் அவன் அருளால் நேர்மையான முறையில் செல்வம் ஈட்டுவது என்பது விளக்கம்.





நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் நமது தினசரி வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது;ஒரு நாளுக்கு 12 மணி நேரம் நாம் உழைத்தாலும்,நமது தேவைகளுக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் தவிப்பவர்களே நம்மில் அதிகம்;

இது போன்ற தெய்வீக ரகசியங்களை ஆன்மீகவாதிகள் அனனவருமே அல்லது பெரும்பாலானவர்கள் வலைப்பூ/இணையதளம் மூலமாக வெளியிடுகிறார்களா?


அப்படியே வெளியிட்டாலும்,உரிய தெய்வீக நிகழ்ச்சிகளை தாமே தலைமை தாங்கி நடத்துகிறார்களா?

 


இந்தப் பதிவினை வாசிக்கும்  நாம் ஒவ்வொருவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;இதனால்,நமக்கு நியாயமான முறையில் வர வேண்டிய சம்பள உயர்வு,பதவி உயர்வு,வராக் கடன்கள்,கிடைக்க வேண்டிய பூர்வீகச் சொத்து,நமது திறமைக்குரிய சம்பளம் தரும் வேலை அல்லது தொழில்.எட்ட வேண்டிய சேவை இலக்குகள்,நமது உழைப்புக்குரிய அங்கீகாரம் சித்தர்களின் ஆசியாலும்,அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தாலும் நம்மை வந்து சேரும்.

கடந்த பல வருடங்களாக இது போன்ற  ஆன்மீக ரகசியங்களை பொது நிகழ்ச்சிகளாக ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடும்,அனுமதியோடும் நமது ஆன்மீகக்கடல் வெளியிட்டுக் கொண்டு வருகிறது;தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து ஏராளமான ஆன்மீகக்கடல் அன்பர்கள் இந்த ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டே இருக்கின்றனர்;இப்படிக் கலந்து கொள்வதன் மூலம் தமது நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்;விடுபட்டு வருகின்றனர்;

இன்று நிம்மதியாகவும்,பொருளாதாரத் தன்னிறைவோடும்,எந்த விதக் குறையின்றியும் வாழ்ந்து வருகிறார்கள்

கிரிவலம்';

கிரிவலம்  (11-12-2016 ஞாயிறு கிழமை )  சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.45am  அளவில் ஒன்று திரள்வோம்.





எதற்காக இந்த சொர்ணாகர்ஷண கிரிவல நாளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும்?

அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கே நமது முன்னோர்களின் ஆசியும்,நமது குல தெய்வத்தின் அருளும் தேவை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற ஆடையை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும் என்ற தெய்வீக விதி இருக்கிறது. அது பற்றிய விளக்கமான பதிவு விரைவில் ஆன்மீகக்கடலில் வெளிவரும்.

இந்த மகத்தான நாளில் நாம் மஞ்சள் நிற ஆடை அணிந்து நமது சகஸ்ரவடுகர் அவர்களின் தலைமையில் கிரிவலம் செல்வதால்,நமது கடுமையான கர்மவினைகள் கரைந்து காணாமல் போய்விடும்;இந்த கர்மவினைகளாலும்,சக ஊழியர்கள்/உடன்பழகுபவர்களின் பொறாமையாலும் பல வருடங்களாக நமது வருமான அளவு அதிகரிக்காமல் இருக்கும்;இந்த தடை நீங்கிவிடும்;பணரீதியான தன்னிறைவை எட்டியவர்கள்,இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டால்,அவர்கள் தமது ஆன்மீக முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எட்டுவார்கள்;கடந்த பல ஆண்டுகளில் இந்த உண்மையை பல ஆன்மீகக்கடல் அன்பர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.


முதல் நாளே(10-12-2016)அண்ணாமலைக்கு வர வேண்டும்?





தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருப்பவர்கள் சில மணி நேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;அதே சமயம்,தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரியான நேரத்தில் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்,முதல் நாளே வந்து அண்ணாமலையில் தங்கிக் கொள்வது உத்தமம்.உதாரணமாக,திருநெல்வேலி,தேனி,ராமநாதபுரம்  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலைக்கு வந்தடைய குறைந்தது 12 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.


அண்ணாமலையில் எங்கே தங்குவது? 

எனது குடும்பத்தில் இருந்து யாரெல்லாம் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ளலாம்?


நமது குடும்பத்தில் யாரெல்லாம்  பக்தி உணர்வுடன் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து வரலாம்;நமது இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம்;

இட்லிதானம் செய்வது எப்படி?

இந்த ஶ்ரீ துன்முகி வருடத்தில் , வளர்பிறையில், பரணி நட்சத்திரத்தில் மேலும் அய்யன் சிவபெருமானையே தம் கோம்புகளைக்கிடையே தாங்கும் நந்தியின் சிறப்பிற்கு உரிய பிரதோஷ நாளில் ஶ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலநாள் அமைந்திருக்கிறது.இந்த நாளில் நாம் ஒவ்வொருவருமே காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் என்று அண்ணாமலையில் அன்னதானம் செய்வது நமது அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும்;கிரிவலப் பயண நேரம் குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்;அதிக பட்சம் 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்;ஆக,காலையிலும் மதிய நேரத்திலும் நாம் இந்த நாளில் கிரிவலப்பயணத்தில் இருப்போம்;

காலையிலும்,மதிய நேரத்திலும் கிரிவலப் பாதையில் நம்மால் எத்தனை சாதுக்களுக்கு இட்லி தானம் செய்ய முடியுமோ அத்தனை சாதுக்களுக்கு நம் குருவின் சொல்லிற்கு இணங்க தானம் செய்வோம்;கூடவே,நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை ஒவ்வொரு இட்லிதானத்துடனும் சேர்த்தே கொடுப்போம். கிரிவலப்பாதையிலும் சில உணவகங்கள் இருக்கின்றன;எனவே,மதிய நேரத்திற்கு கிரிவலப் பாதையில் மதிய நேர அன்னதானத்திற்கு உணவு வாங்கிக் கொள்ளலாம்;அல்லது குபேர லிங்கம் வந்ததும்,நம்மில் ஒரு சிலர் ஆட்டோவில் நகருக்குள் பயணித்து உணவுப் பொட்டலங்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்தும் தானம் செய்யலாம்;


எள்ளுப்பொடியைத் தயார் செய்வது எப்படி?

இன்றைய கால கட்டத்தில் மளிகைக்கடைகளில் ரெடிமேடாக எள்ளுப்பொடி கிடைக்கிறது;ஒருவர் ஐந்து இட்லிகள் சாப்பிடும் அளவுக்கு எள்ளுப்பொடியை ஒரு சிறு பாலிதீன் பையில்(சுற்று சூழலை மாசுபடுத்தாத ) நிரப்பி அத்துடன் சுத்தமான நல்லெண்ணெயை கலந்து சிறு கயிற்றால் கட்டிக் கொண்டு வருவோம்;நாம் எத்தனை பேர்களுக்கு இட்லிதானம் செய்ய விரும்புகிறோமோ,அத்தனை பாலிதீன் பைகளில் எள்ளுப்பொடி+நல்லெண்ணெய் நிரப்பிக் கொண்டு வருவது அவசியம்.

பாரம்பரியம் மாறாத ஏராளமான குடும்பங்கள் இன்றும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றன;அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வரலாம்;

தனித்து வாழ்ந்து வருபவர்கள்,வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் முதலில் சொன்ன யோசனையை நடைமுறைப்படுத்துவது போதுமானது;

(இட்லிப்பொடி என்பது உளுந்துப்பொடி என்பதை நினைவிற் கொள்க)




ஏன் இட்லியுடன் எள்+நல்லெண்ணெய் கலந்த கலவையை தானம் செய்ய வேண்டும்?

அது தெய்வீக ரகசியம்! நமது கர்மவினைகள் தீரும் ரகசியம் இதனுள் தான் புதைந்திருக்கிறது.நீங்கள் எங்கெல்லாமோ அன்னதானம் செய்திருப்பீர்கள்;அரிசி தானம்,கோதுமை தானம்,பழ தானம்,ஆடை தானம்,ருத்ராட்ச தானம்,விஷய தானம் செய்திருப்பீர்கள்.அதைவிடவும் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கலவையுடன் இட்லி தானம் செய்வது!


இட்லி தானம் செய்வதற்கு எங்கே வாங்குவது?

கிரி வலத்திற்கு முந்திய நாள் மாலை5 மணிக்குள்/நேரத்திற்குள் அண்ணமலைக்கு வந்துவிட்டாலே சரியான உணவகத்தை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.அங்கேயே கூட நாளைக் காலை எனக்கு ஐந்து இட்லிகள் கொண்ட பார்சல்கள் இத்தனை தேவை என்று கூட முன்பதிவு செய்து கொள்ளலாம்;

அண்ணாமலையில் ஒரு உணவகத்தில் ஒவ்வொரு வேளையும் சமையல் செய்து முடித்ததும்,அந்த உணவுகளின் முன்பாக சைவ முறைப்படி தேவாரம் முதலான பதிகங்கள் பாடியப்  பின்னரே பரிமாறுகிறார்கள்.


 

நவதானியங்களையும், டயமண்டு கல்கண்டையும் ஏன் வாங்க வேண்டும்?

நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றன;நமது கைகளால் நவதானியங்களை ஆதிசிவனின் பாதத்தில்  (அண்ணாமலை கிரிவலப் பாதையில்) தூவ வேண்டும்;நமது கைகள் பட்டு தூவுவதால்,அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும்;அவ்வாறு முளைக்கத் துவங்கியதுமே,நம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம்  தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக்  கொள்ளும்; நாம் தினசரி வாழ்க்கையில் சிக்கல்கள் இன்றியும்,பிரச்னைகள் இல்லாமலும் நிம்மதியாக வாழத் துவங்குவோம் என்பது  ஆன்மீக குருவின் ஆராய்ச்சிகளில் ஒன்று.

கல்கண்டு சாப்பிடுவதால் சுகர் அதிகரிக்காது;அப்பேர்ப்பட்ட இயற்கை இனிப்பு கல்கண்டு ஆகும்.அதை இன்றைய நவீன காலகட்டத்தில் மோல்டிங் மெஷின்கள் மூலமாகத் தயாரிக்கிறார்கள்;அதனால்,தற்போது கல்கண்டு வைரக்கல் வடிவிற்கு மாறிவிட்டது;இதையே டயமண்டு கல்கண்டு என்று அழைக்கிறோம்.

 


நவதானியங்களையும்,டயமண்டு கல்கண்டையும் எங்கே வாங்குவது? எப்படித் தூவுவது?

10-12-2016 இரவு 9 மணிக்குள் அண்ணாமலையை நாம் வந்தடைந்து விட்டால்,அண்ணாமலையிலேயே நவதானியங்களையும்,டயமண்டு கல்கண்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.

11-12-2016 காலையில் நேரடியாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்பவர்கள், அவரவர் ஊரிலிருந்தே இவைகளை வாங்கிக் கொண்டு வரவும்.

அக்னிலிங்கம் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம் ஆகும்;இதைக் கடந்ததும்,நகர்ப்பகுதி நிறைவடைந்துவிடும்;மலையும் காடும் சூழ்ந்த பகுதி துவங்கும்;இங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது ஒன்பதாவது! சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம் வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் தூவ வேண்டும்;கொட்டக் கூடாது;இரு கைகளால் தூவிக் கொண்டு வருவது நன்று;சிறிது சிறிதாகத் தூவி வருவதே நன்று. இவை அனைத்தும் நம் ஆன்மீக குரு அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் வழிகாட்டுதல்படி, முறையாக செய்து முழு பலனையும் அடைவீர்களாக  !!

கிரிவலத்தின் போது செருப்பு அணிந்து நடக்கலாமா?


செருப்பு அணியாமல் நடப்பதே நன்று.இதில் விதிவிலக்கும் உண்டு.மழைக்காலமாக இருப்பதால்,குடை,ரெயின்கோட்,(வயதானவர்கள்,நோய் உள்ளவர்கள்)உரிய மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்;

கிரிவலத்தில் மட்டும் கலந்து கொள்ளலாமா?

கிரிவலம் மதியம் 2 மணிக்குள் நிறைவடைந்துவிடும்;பின் அண்ணாமலையார் - உமையாள் ஆலயம்  வழிபட்டு பின் அவரவர் தம் வீட்டுக்கு செல்வது உத்தமம்.

( கிழக்குக்  கோபுர வாசலில் இரவு நேர அன்னதானத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்குள் அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுவிடலாம்;இரவுநேர அன்னதானத்திற்கு சைவ உணவாக நம்மால் முடிந்ததை வாங்கிக் கொடுத்துவிட்டுப் புறப்படலாம்)


இத்துடன் சொர்ணாகர்ஷண கிரிவல நிகழ்ச்சிகள் நிறைவடையும். நேராக நாம் வாழ்ந்து வரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக் கோவிலுக்கும்,யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது.

ஆன்மீக பயணமும் அன்பர்கர்களின் ஆனந்த பகிர்வுகளும் : 

கோவையில் இருந்து ( முதல்முறை ) வந்த அன்பர்களில் ஒருவர் பல வருடங்களாக வேலையில்லாமல், தனது பெற்றோரை மட்டும் நம்பி வாழ்ந்துவந்தார். நண்பரின் பொருட்டு நம் கிரிவலம் பற்றி அறிந்து நம்முடன் கலந்து கொள்ள முடிவு செய்தார். தமது பயணத்தை தொடங்குமுன் தமது பெற்றோரிடம் அனுமதி பெற்று இறைவனை வணங்கி பின் இதுவரை நேரில் பார்த்திடாத நம் அய்யா சகஸ்ரவடுகரை மனதார எண்ணி வணங்கி, நேர்மையான கோரிக்கையுடன் பயணத்தினை தொடங்கியதா விழியில் சிறு கண்ணீருடன் கூற தொடங்கினர். ஆச்சர்யம் என்னவென்றால் குபேர லிங்கத்தினை கடந்து ஈசான்ய லிங்கத்தை அடையும் முன் தமது தந்தை அழைத்ததாகவும, பணி 
நிமித்தமாக, இழுபறியில் இருந்தது முடிவடைந்து வேலையில் சேருமாறு கடிதம் வந்தாய் கூறி ஆனந்த தாண்டவம் ஆடினார்.


 

திருப்பூரில் இருந்து வந்திருந்த அன்பர்களில் ஒருவர் தமது தொழில் நிமித்தமாக பல ஏமாற்றங்களை சந்தித்து, நீதிமன்ற வழக்கு வரை சென்று , பாதகமான சூழ்நிலையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகவும் , இறைவா உம்மையும் குருவையும் நம்பி வருவதாகவும் எண்ணி இரண்டாம் முறை நம் கிரிவலத்தில் கலந்து கொண்டதாக கூறினார், அதிசயம் என்னவென்றால் அவருக்காக வாதாடிய வக்கீல் அன்று கிரிவலத்தில் கலந்துகொண்டார் காரணம் ?? நம் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் சென்ற முறை கூறிய பதில் அப்படி -?  ஆம் வெற்றி கண்டு வாதாடியுடன் வருவாய் என்று ஆசி வழங்கியதை நினைவு கூறி மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.


சென்னையில் இருந்து வந்த அன்பர் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த, தம் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி கிரிவலம் வந்தார். தம் தவறை உணர்ந்த நிலையில் இருந்த நண்பரிடம்,  நமது அய்யா சகஸ்ரவடுகர், ஈசான்ய லிங்கத்தில் ஆசி வழங்கும்போது உணர்ந்தபின் உடையவள் உன் அருகில் தான் கவலை வேண்டாம். கிரிவல நிறைவில் அவர், அய்யா திருவடி பணிந்து - வாக்கு பலித்தது அய்யா என்று தேம்பி அழுது, சரணாகதி அடைந்தார். 

 

அன்பர்களே " யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்னும் எண்ணம் மட்டும் எப்பொழுதும் நம் நினைவில் கொள்ளவோம் " ! 


ஓம் அருணாச்சலாய நமஹ !     ஓம் சிவசிவ ஓம் !!   ஓம் சிவசக்தி ஓம் !!!