RightClick

சபரிமலை பதினெட்டுப்படியின் சிறப்பு

சபரிமலை பதினெட்டுப்படி

சபரிமலைக்கு சென்றபிறகு பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆவலில், பம்பை நதிக்கரையிலேயே சிலர் கட்டு கட்டி அப்படியே மலை ஏறுகிறார்கள். இவர்கள் விரதம் எதுவும் இருப்பதில்லை. முறையாக விரதமிருந்து குருசாமி அல்லது கோயில் அர்ச்சகர் மூலம் மாலை அணிந்து தான், கன்னி சுவாமிகள் மலைக்குச் செல்ல வேண்டும். பம்பைக்கு சென்றபிறகு மாலை அணிந்து மலை ஏறுவது பாவமாகும். முன்னதாகவே மலைக்குச் செல்பவர்கள், ஊர் திரும்பிய பிறகும், மகரவிளக்கு காலம் முடியும் வரை தொடர்ந்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
சபரிமலையில் சாஸ்தாவின் சந்நிதானத்துக்கு நிகராக கருதப்படுவது பதினெட்டுப்படி. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இது தெய்வீக சக்தி மிக்கதாகும்.
மனித வாழ்வில் குறிக்கோளைப் போல, அதை அடையும் பாதையும் முக்கியமானது என்பதை இந்தப் படிகள் விளக்குகின்றன.
ஒவ்வொரு படியும் ஒன்பது அங்குல அகலமும், அதே அளவு உயரமும் கொண்டதாகும். நீளம் ஐந்தடி. முதல் ஐந்து படிகள் இந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி) ஐந்தையும், ஆறு முதல் 13 வரையிலான படிகள் மனிதனின் பலவித ஆசைகளையும், பதினான்கு முதல் பதினாறு வரையுள்ள படிகள் மனிதனின் முக்குணங்களையும் (ஆணவம், கன்மம், மாயை), பதினேழாம்படி அறியாமையையும், பதினெட்டாம் படி அறிவுநிலையையும் குறிக்கிறது. ஒவ்வொரு படியில் ஏறும் போதும் ஐயப்ப பக்தர்கள் இந்த நிலைகளைக் கடந்து செல்வதாக ஐதீகம்.
இப்படிப் பட்ட சக்தி வாய்ந்த பதினெட்டுப்படிகளை பக்தியோடும் முறையான விரதத்தை மேற்க்கொண்டும் கடந்து சென்று சபரிமலை வாழ் ஐயப்பனை தரிசிப்போம்.