RightClick

சனிப்பெயர்ச்சியும் பைரவ வழிபாடும்!!!


30 ஆண்டு வாழ்ந்தாரும் இல்லை;30 ஆண்டு வீழ்ந்தாரும் இல்லை; என்பது ஜோதிடப் பழமொழி! ஒரு ராசியில் இருந்து பெயர்ச்சி ஆன சனி மீண்டும் அந்த ராசிக்கு வர 30 ஆண்டுகள் ஆகும்;ஒரு ராசியை இரண்டரை ஆண்டுகளில் சனி கடக்கிறார்;12 ராசியைக் கடக்க 30 ஆண்டுகள் ஆகிறது;இந்த ஜோதிட விளக்கமே ஜோதிடப்பழமொழியாக பரிணமித்திருக்கிறது;

26.6.2009 அன்று துலாம் ராசிக்குள் சனி பெயர்ச்சியாகி வந்தார்;இதோ இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன;16.11.2014 அன்று விருச்சிகராசிக்குள் நுழையப்போகிறார்;மீண்டும் துலாம் ராசிக்கு 2039 ஆம் ஆண்டில் தான் வருவார்;

நவீன மருத்துவம் நமது உடல் ஆரோக்கியம் பற்றிகூறுவது என்னவெனில்,சாப்பிடும் அளவு குறையும் போதும்,வேளாவேளைக்குச் சாப்பிடாமல் இருக்கும் போதும் நமது உடலானது ‘அவசரத் தேவை’க்கு சேமித்து வைத்திருக்கும் கொழுப்பு சக்தியைப் பயன்படுத்திக் கொள்கிறது;அதன் மூலமாக நாம் மெலிந்தாலும் பரிபூரணமான ஆரோக்கியத்தைப்பெறுகிறோம்;இதையே நமது முன்னோர்கள் உபவாசம் என்ற மரபினைத் தோற்றுவித்தனர்;தமிழ் மாதத்தில் அமாவாசை,ஏகாதசி,சதுர்த்தி,சஷ்டி,பவுர்ணமி வரும் நாட்களில் ஒருவேளை மட்டும் உண்டு(பல நாட்களில் நீராகாரம் மட்டும் அருந்தி) அந்த நாள் முழுவதும் உரிய கடவுளின் மந்திரம் ஜபித்து வந்தனர்;30 நாட்களில் வெவ்வேறு ஐந்து நாட்களில் இப்படி எதுவும் சாப்பிடாமல் இருப்பதன் மூலமாக நமது உடல் உறுப்புகள் ஓய்வு எடுத்துக் கொண்டன;இதனால் தான் நமது முன்னோர்களில் பெரும்பாலானவர்கள் 100 வயது வரை வாழ்ந்தனர்;

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி என்று சனிபகவான் ஒருவருடைய 30 வருட ஆயுளில் 20 வருடங்களை கபளீகரம் செய்துவிடுகிறார்;எனவே,ஒரு மனிதனால் ஒவ்வொரு 30 வருடங்களிலும் வெறும் 10 வருடம் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்;இந்த 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் வரையிலும் சனியின் தாக்கத்தால் பல்வேறு சிக்கல்கள்,பிரச்னைகள்,வேதனைகள் வந்து சரியான நேரத்தில் சாப்பிடமுடியாமல் போய்விடுகிறது;இதை முன் கூட்டியே உணர்ந்த நம்முடைய சைவ முன்னோர்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் வரையிலும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் வழக்கத்தை உருவாக்கினர்;இதன் மூலமாக 20 வருட சனியின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் ஆத்மபலத்தைப் பெற்றனர்;

நாம் வாழ்ந்து வருவதோ கணினியுகம்! ஒரு நாளில் ஒருவேளை சாப்பிடாமல் போனாலோ அல்லது சரியான நேரத்தில் நாம் சாப்பிடாமல் போனால் நமது மனநிலை எப்படி மாறிவிடுகிறது?தமிழர்களாகிய நம்மில் பெரும்பாலானவர்கள் பசி தாங்கமாட்டார்கள்;பசியின் போது நமது அனைத்து நற்குணங்களும் மாறிவிடுகின்றன;
நாம் வாழும் வேகமான காலகட்டத்தில் சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள நமது குரு ஒரு சுலபமான வழியைக் காட்டியிருக்கிறார்;

அதுதான் பைரவ வழிபாடு!

பைரவ வழிபாடு செய்வதற்கு உபவாசம் இருக்க வேண்டியதில்லை;ஒருவேளை நாம் உபவாசம் இருக்க நினைத்தாலும் 1970க்குப் பிறகு பிறந்தவர்களால் முடிகிறதா?

அசைவம்,மதுவைக் கைவிட்டு
தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வரலாம்;

அல்லது

தினமும் வேலைக்கு/தொழிலுக்குச் செல்லும் போது வழியில் தென்படும் சிவாலயத்தினுள் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப்பெருமானை மட்டும் வழிபட்டுச் செல்லலாம்;

அல்லது

ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு காலத்தில்(காலை 9 முதல் 10.30க்குள்) ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியை அவரது சன்னதியில் பாடலாம்;வசதியிருந்தால் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால்      அரகஜா கொண்டு அபிஷேகம் செய்து கொண்டே ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியைப் பாடலாம்;நிறைய ஓய்வு நேரம் இருந்தால் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியைப் பாடலாம்;

அல்லது

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் அருகில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று ராகு கால அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம்;

அல்லது

வீட்டில் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யலாம்;

16.11.2014 அன்று சனி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்;ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருக்க வேண்டிய சனி,கடந்த மாமாங்கமாக மூன்று ஆண்டுகள் வரை இருக்கிறார்;கலியுகத்தில் சனியின் தாக்கம் மனிதர்களுடைய வாழ்க்கையில் மிகவும் குறைவே!

இருப்பினும் அந்த குறைவான சனிதாக்கத்தையே நம்மால் சமாளிக்கமுடியாமல் தவிக்கிறோம்;விருச்சிக ராசியில் நுழையும் சனி 11.2.2018 அன்றுதான் தனுசுராசிக்குப்பெயர்ச்சியாக இருக்கிறார்;
இந்த விருச்சிகராசிக்கு சனிப் பெயர்ச்சி ஆவதால்,மேஷ ராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பமாகிறது;

ரிஷபராசிக்கு கண்டச்சனி ஆரம்பமாகிறது;
சிம்மராசிக்கு அர்த்தாஷ்டமச்சனி ஆரம்பாகிறது;
கன்னி ராசிக்கு ஏழரைச்சனி முழுமையாக விலகுகிறது;
துலாம் ராசிக்கு கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனி விலகி,வாக்குச்சனி/பாதச்சனியாக மாறுகிறது;
விருச்சிக ராசிக்கு விரையச்சனி நிறைவடைந்து கடுமையான காலகட்டமான ஜன்மச்சனி ஆரம்பமாகிறது;
தனுசு ராசிக்கு விரையச் சனி ஆரம்பமாகிறது;
மீன ராசிக்கு அஷ்டமச்சனி முழுமையடைந்து,நன்மைகளை அள்ளித் தரும் பாக்கியச்சனியாக பரிணமிக்கிறது;


ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் ஆறு ராசிக்காரர்களுக்கு அளவற்ற துன்பத்தையும்,ஆறு ராசிக்காரர்களுக்கு அளப்பரிய நன்மைகளையும் தருவதாக அமைகிறது;
விருச்சிக சனிப்பெயர்ச்சியானது மேஷம்,ரிஷபம்,சிம்மம்,துலாம்,விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு தீமையைத் தரும் சனியாக மாறுகிறது.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்றுடன் அசைவம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்;மது,போதை தரும் பொருட்கள் உபயோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்;அதன்பிறகு தான் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்ய வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருள் கிட்டும்;இந்த ராசிக்காரர்கள் 11.2.2018 வரையிலும் மேலே கூறப்பட்டிருக்கும் பைரவ வழிபாட்டுமுறையில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது விடாப்பிடியாகப் பின்பற்றி வரவேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே அவர்கள் அனைத்து துயரங்களில் இருந்தும் மீண்டு வாழ்க்கைப்பயணம் ஸ்மூத்தாகப் போகும்;


சரி! சனிக்கும் ஸ்ரீகாலபைரவருக்கும் இருக்கும் தொடர்புதான் என்ன?
மிருகண்டு மகரிஷிக்கு அவரது பிறந்த நட்சத்திரப்படியும்,ராசிப்படியும் ஏழரை ஆரம்பமானது;எனவே,அவரை சிக்கலில் மாட்டிவிட்டார் சனி.

சித்தர்கள்,ரிஷிகள்,மஹான்கள்,சாதுக்கள் எந்த ஒரு ஆசையும் இல்லாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தியானம்,தவம்,பிராணயாமம் என்று இருந்து வருபவர்கள்;இவர்களுக்கு என்று எந்தவித ஆசாபாசமும் கிடையாது;ஆசையின் மூலமாகவே சனி நமது நல்ல நேரத்தின் போது தவறுகளைச் செய்ய வைக்கிறார்;பிறகு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி வரும் போது அந்தத் தவறுக்குரிய தண்டனையைத் தரும் விதமாகச் செயல்படுகிறார்;இந்த விதியெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கே பொருந்தும்;


சனியின் இந்த செயல்பாட்டினால் மிருகண்டு மகரிஷி அவமானப்படும் சூழலை அடைந்தார்;இதற்கு யார் காரணம் என்று தனது தவ ஆற்றல் மூலம் நினைத்தார்;சனிதான் காரணம் என்று அறிந்ததும்,சனிக்கு வாதநோய் வரக் கடவது என்று சாபம் விட்டார்;முனிசாபம் உடனே செயல்படும் என்பதற்கிணங்க,சனிக்கு உடனே வாதநோய் வந்துவிட்டது;


சனியின் வேதனையை உணர்ந்த அவரது அன்னை சாயாதேவி, சனியை பைரவ வழிபாடு செய்யும் படி போதனை செய்தார்;அதன்படி,சனி பைரவ வழிபாடு பல கோடி ஆண்டுகளாக செய்து வந்தார்;பைரவப்பெருமானின் அருளால் மிருகண்டமகரிஷியின் சாபம் நிவர்த்தியானது;சனியின் வாதநோய் விலகியது;இதனால் அகமகிழ்ந்த சனி, ஸ்ரீகாலபைரவப்பெருமானிடம் தன்னை அவரது சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்;


ஸ்ரீகாலபைரவப் பெருமானும் அவரை சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஏராளமான தெய்வீக உபதேசங்களை போதித்தார்;அதன்படி,மீண்டும் சனி ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்து வந்தார்;இதன் மூலமாக ஸ்ரீகாலபைரவப் பெருமானால் ;நவக்கிரகப் பதவி’ பெற்றார்;


பூமியில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருடைய தொழில்/வேலை மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பை ஸ்ரீகாலபைரவப்பெருமான் சனியிடம் ஒப்படைத்தார்;


‘யார் என்னை தொடர்ந்து வழிபடுகிறார்களோ,அவர்களை நீ ஒருபோதும் துன்புறுத்தக் கூடாது’ என்று சனியிடம் ஸ்ரீகாலபைரவர் சத்தியம் வாங்கியப் பின்னரே நவக்கிரகமாகச் செயல்பட அனுமதித்தார்;


இந்த சம்பவம் தஞ்சை,திருவாரூர் மாவட்டப்பகுதியில் நடைபெற்றிருப்பதால்,இந்தப்பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான  கோவில்களில் ஒரே சன்னதியில் ஸ்ரீகாலபைரவருடன் சனி இருப்பதைக் காணலாம்;(ஸ்ரீகாலபைரவருக்கு சனி கட்டுப்பட்டவர் என்பது இதன் தாத்பர்யம்!!!)


துலாம் ராசியினர் 11.2.2018 வரை:சனிக்கிழமை தோறும் வரும் ராகு காலநேரத்தில்(காலை 9 முதல் 10.30 வரை) ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் திருஷ்டிப்பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றிட வேண்டும்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க/எழுத வேண்டும்;


விருச்சிகராசியினர் 11.2.2018 வரை:சனிக்கிழமை தோறும் காலை 9 முதல் 10.30க்குள் மண் அகல் விளக்கிற்கு கறுப்பு வண்ணம் பூச வேண்டும்;அதில் பாதி நெய்,பாதி இலுப்பை எண்ணெய் நிரப்ப வேண்டும்;இத்துடன் ஒரே ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும்;இந்தக்கலவையில் ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் விளக்கேற்ற வேண்டும்;இத்துடன் தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க/எழுத வேண்டும்;


தனுசு ராசியினர் 11.2.2018 வரை:சனிக்கிழமை தோறும் காலை 9 முதல் 10.30க்குள் ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் தேங்காய் உடைத்து அந்தத் தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்;தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ 108 முறை ஜபிக்க/எழுத வேண்டும்;


மேஷ ராசியினர் 11.2.2018 வரை:சனிக்கிழமை தோறும் இரவு 7.30 முதல் 9.30க்குள் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு வர வேண்டும்;இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய்தீபம் ஏற்ற வேண்டும்;படையலாக கருவேப்பிலைச்சாதம் ஸ்ரீகாலபைரவப் பெருமானின் பாதத்தில் வைக்க வேண்டும்;நமது பெயருக்கு அர்ச்சனை செய்த பின்னர்,அங்கே வருபவர்களுக்கு அந்த கருவேப்பிலைச்சாதத்தை பகிர்ந்து தர வேண்டும்;நாமும் உண்ணலாம்;பாதியை வீட்டுக்குக் கொண்டு சென்று பிறருக்கும் பிரசாதமாகத் தரலாம்;ஒவ்வொரு மாதாந்திர சனிதோறும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு கறுப்புப்பட்டு சாத்த வேண்டும்;தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று 108 முறை ஜபிக்க/எழுத வேண்டும்;


ரிஷபராசியினர் 11.2.2018 வரை:திங்கட்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு அல்லிமலர் மாலை அணிவிக்க வேண்டும்;புனுகு பூச வேண்டும்;திருஷ்டிப்பூசணி என்ற சாம்பல் பூசணியில் விளக்கேற்ற வேண்டும்;பாகற்காய் சாதம் படையலிட வேண்டும்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுத/ஜபிக்க வேண்டும்;


சிம்ம ராசியினர் 11.2.2018 வரை:வெள்ளிக்கிழமை தோறும் காலை 10.30 முதல் 12க்குள் ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தாமரை மாலை அணிவிக்க வேண்டும்;புனுகு பூச வேண்டும்;வெள்ளைப்பூசணி கலந்த சாம்பார்சாதம் படையலாக வைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து,அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் உண்ணலாம்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்;


மேலும் இந்த ராசியினர் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீகாலபைரவர் அபிஷேகத்தில் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்;


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ