RightClick

எந்தக் கடவுளுக்கு எந்த மலர்மாலையை அணிவிக்க வேண்டும்?

ஆன்மீகத்தில் முன்னேற விரும்புவோர் மணி,மந்திரம்,ஒளஷதம் இம்மூன்றையும் பயன்படுத்த வேண்டும்;அதன் மூலமாக ஆன்மீகத்தில் பல சாதனைகளை எட்ட முடியும்;காலம் காலமாக இப்படித்தான் முன்னேறினார்கள்;ஆனால்,எப்படி முன்னேறினார்கள் என்பது குருவானவர்,தகுந்த சீடனுக்கு மட்டும் உபதேசித்து வந்துள்ளார்;இதனால்,சமுதாயத்தில் பொறுப்பான சீடர்களும்,தகுதி நிறைந்த குருநாதர்களும் யுகம் யுகமாக உருவாகிக் கொண்டே வந்துள்ளார்கள்;


நாம் வாழ்ந்து வருவதோ தகவல்யுகம்! தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று எங்கோ இருந்து உலகம் முழுவதும் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்ப முடிகிறது;அப்படி பரப்பினாலும்,சபையில் சொல்லக் கூடிய விஷயங்களைத்தான் குருவருளாலும்,குருவின் அனுமதியோடும் வெளிப்படுத்தி வருகிறோம்;ஆன்மீகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்ட விரும்புவோர் தொடர்ந்து நமது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே வந்தால் மட்டுமே மேற்கொண்டு முன்னேற்றத்துக்குரிய தீட்சை அல்லது பயிற்சி அல்லது உபதேசம் கிடைக்கும்;


மணி மந்திரம் ஒளஷதம் என்ற வார்த்தைகளைக் கொண்டே சுமாராக 100 ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்;அவ்வளவு ஆன்மீகப் பொக்கிஷங்கள் இந்த மூன்று வார்த்தைகளிலும் புதைந்திருக்கின்றன;

நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு ஆன்மீகத்தில் வளர்ச்சியடைய பக்தி மார்க்கமே போதுமானது;கோவில்களுக்குச் சென்று வழிபடுதல்,வீட்டிலேயே மந்திரம் ஜபித்தல்,குறிப்பிட்ட திதியன்று குறிப்பிட்ட தெய்வத்தை அவரவரின் பிறந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் திசையைப் பொறுத்து வழிபடுதல் போன்றவையே போதுமானது;


உதாரணமாக,கேது மஹாதிசை,கேதுவுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் திசை,கேதுவின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகத்தின் திசை போன்றவை வரும் போது தேய்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும்;


சுக்கிரமஹாதிசை வந்தால்,திருக்கோவிலூருக்கு அவரவர் ஜாதகப்படி குறிப்பிட்ட கிழமை அல்லது நட்சத்திரநாள் அல்லது திதி வரும்போது சென்று வழிபட வேண்டும்;அவசியப்பட்டால் அபிஷேகம் செய்ய வேண்டும்;

சூரிய மஹாதிசை வந்தால் கண்டிப்பாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;

சந்திர மஹாதிசை வந்தால் சாந்தமான பெண் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;சந்திரனுடன் ராகு,செவ்வாய் போன்ற பாவக் கிரகச் சேர்க்கை இருந்தால் உக்கிரமான பெண் தெய்வத்தை ‘முறைப்படி’ வழிபட வேண்டும்;

செவ்வாய் மஹாதிசை வந்தால் சஷ்டி திதியில் முருகக் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;அவரவர் ஜனன ஜாதகப்படி கடலோர முருகன் அல்லது மலைமீது அமர்ந்திருக்கும் முருகக்கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;

ராகு மஹாதிசை வந்தால் நாகர்கோவில் நாகராஜா கோவில்,இருக்கன்குடி,சமயபுரம்,பொன்னமராவதி அருகில் அமைந்திருக்கும் பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோவில்,கரூர் பசுபதீஸ்வரர் கோவிலினுள் அமைந்திருக்கும் கருவூர் சித்தர் வழிபாடு,திருநாகேஸ்வரம்,காளஹஸ்தி பாதாளபைரவர் வழிபாடு மற்றும் உக்கிரமான பெண் தெய்வ வழிபாடு =இவைகளில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்;ராகு மஹாதிசை நடைபெறும் 18 ஆண்டுகளுக்குமே இந்த மாதிரியான கோவில்களுக்கு மாதம் ஒருமுறை செல்ல வேண்டும்;ராகுவின் நட்சத்திரம் நிற்கும் நாளில்,ராகு காலத்தில் வழிபாடு நற்பலன்களைத் தரும்;


குரு மஹாதிசை வந்தால் சித்தர்கள் வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும்;ஆன்மீக வழிகாட்டிகளின் தொடர்பும் அதன்மூலமாக தெய்வீக ரகசியங்களும் தேடி வந்துகொண்டே இருக்கும்;குரு ஓரை மற்றும் குருவின் நட்சத்திர நாட்களில் தெய்வீக முன்னேற்றங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்;


சனிமஹாதிசை வந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்ய வேண்டும்;இதன் மூலமாக சனி மஹாதிசையின் வலிமை அதிகரிக்கும்;யோகம் தரும் சனிமஹாதிசையாக இருந்தால் யோகத்தின் சக்தி அதிகரிக்கும்;அவயோகம்/பாதகம் தரும் சனி மஹாதிசையாக இருந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு அதை பெருமளவு குறைத்துவிடும்;


புதன் மஹாதிசை வந்தால் மஹாவிஷ்ணு வழிபாடு செய்ய வேண்டும்;


எந்த திசை வந்தாலும் சரி;இறைவனை பூக்கள் ,பழங்கள்,தூபதீப நைவேத்தியம் கொண்டு வழிபட வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது பக்தியுணர்வு இறைசக்தியைச் சென்றடைகிறது;அவ்வாறு சென்றடையும் போது நமது கோரிக்கைகளும்நீண்டகால ஏக்கங்களும்,வேண்டுதல்களும் இறைசக்தியைச் சென்றடைகின்றன;


வேகமான வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்தச் சூழ்நிலையில்,நம்மில் பலர் கோவிலுக்குள்ளேயும் பரபரப்பாகவே வழிபாடு செய்கிறோம்;வேகமாக கோவில் வாசலுக்கு வருகிறோம்;தேங்காய் பழக்கடையில் நமக்குத் தேவையான தேங்காய்,பழம்,பத்தி,கற்பூரம்/நெய்தீபம் வாங்குகிறோம்;கடைக்காரரும் கேரி பேக்கில் வைத்துத் தருகிறார்;(சில சமயம் தட்டிலும் வைத்துத் தருவதுண்டு) அந்த கேரிபேக்குடன் வேகமாக கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு நொடிக்கும் ஒவ்வொரு சன்னதியில் நின்று வேகமாக வேண்டிவிட்டு,மூலஸ்தானத்துக்குச் செல்கிறோம்;கடைக்காரர் கொடுத்த கேரிபேக்கை ‘அப்படியே’ பூசாரி/பட்டர்/சிவாச்சாரியாரிடம் கொடுத்துவிடுகிறோம்;இப்படிச் செய்வதால் நமது கோரிக்கைகள் நிறைவேறுவதே இல்லை;ஏன்
கடைக்காரர் கேரிபேக்கினுள் தேங்காயை எடுத்து வைக்கும் போது ‘மகளுக்கு கல்யாணம் ஆகணும்’ என்றோ,
‘கடன் சீக்கிரம் தீரணும்’ என்றோ
‘சொந்தமா வீடு வாங்கணும்’ என்றோ
கட்டிய வீட்டுக் கடன் சீக்கிரம் தீரணும்’ என்றோ நினைத்து தேங்காயை எடுத்துத் தருகிறார்;அவரது எண்ணம் தேங்காயில் படிந்து விடுகிறது;
அதேபோல்,பழங்கள்,பத்தி,கற்பூரம்/நெய்தீபம் இவைகளையும் வைத்துத் தருகிறார்;நாமோ,நமக்கு இருக்கும் ‘பிஸி’யில் கேரிபேக்கில் இருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கூடத்தருவதில்லை;இதனால்,கடைக்காரரின் கோரிக்கை நிறைவேற நாம் பூஜைப் பொருட்கள் வாங்குகிறோம்;ஒருவேளை தட்டில் பூஜைப் பொருட்கள் வாங்கினாலும் பூசாரியிடம் கொடுக்கும் போது பூஜைப் பொருட்களை நாம் நமது இரண்டு கைகளால் தொட்டுத் தருகிறோமா?(அப்படி நாம் தொட்டுத் தந்தால் மட்டுமே நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நமது ஆன்மீக குருவின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு)


முழு முதல்கடவுளான விநாயருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்;(ஒருபோதும் துளசி மாலை அணிவிக்கக் கூடாது)


தனியாக இருக்கும் முருகக் கடவுளுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;
வள்ளிதெய்வானை சமேத முருகக் கடவுளுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்களைக் கோர்த்த மாலையை அணிவிக்க வேண்டும்;


சப்தகன்னியர்களுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்கள் கொண்ட மாலையை அணிவிக்க வேண்டும்;


வைத்தியக் கடவுளான தன்வந்திரிக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;


நரசிம்மருக்கு மல்லிகைப் பூ மாலையை(செவ்வரளிபூவை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;


விஷ்ணு துர்கைக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;

மஹாவிஷ்ணுவுக்கும்,ஹயக்ரீவருக்கும் துளசிமாலையை அணிவிக்க வேண்டும்;ரோஜாமாலையை(துளசியை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;

குலதெய்வம் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும்;
ஜீவசமாதிகளுக்கு மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;

அம்பாளுக்கு ரோஜாமாலை அல்லது செவ்வரளி மாலையை(குஞ்சம் வைக்காமல்) அணிவிக்க வேண்டும்;

சிவபெருமானுக்கும்,சிவலிங்கத்திற்கும் மல்லிகை மாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அல்லது ரோஜாமாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அணிவிக்க வேண்டும்;


காளியம்மாள்,மாரியம்மாள்,பத்திரகாளியம்மாள்,அங்காளபரமேஸ்வரி,    பூமாரி,பரமேஸ்வரியம்மாள்,முனியாத்தாள்,முனீஸ்வரி(அம்பாளின் பெயர்களில் ஒன்று),துர்கையம்மன்,பட்டத்தரசியம்மாள்,பெரியமாரி,சின்னமாரி,   முத்துமாரி,மகேஸ்வரி,ஜெயமாரி,செல்லியம்மன்,செவ்வாடைக்காரி,   பூவாடைக்காரி,கருமாரி,தேவி கருமாரி போன்ற உக்கிரமான பெண்தெய்வங்களுக்கு 27 அல்லது 58 அல்லது 108 எலுமிச்சைம்பழங்களால் மாலையை கட்டி அணிவிக்க வேண்டும்;


அதேசமயம்,இந்த அம்மன் கோவில்களில் ஒருபோதும் எலுமிச்சை பழங்களை அறுத்து அதில் தீபம் போடக்கூடாது;நவீனகால மூடநம்பிக்கையாக இந்த பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது;இந்த உக்கிரமான பெண்தெய்வத்திற்கு ஒரு போதும் ரோஜா மாலையை அணிவிக்கக் கூடாது;


ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீயோக பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு ரோஜாமாலை(குஞ்சமாக அருகம்புல் வைத்து) அல்லது செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்;மிளகுவடை மாலையை செய்தும் அணிவிக்கலாம்;மிளகுவடையை எட்டின் மடங்குகளில் செய்தமாலையாகக்  கோரித்து அணிவிக்கலாம்;


சூரியபகவானுக்கு தாமரை மாலையை அணிவிக்க வேண்டும்;
சந்திரபகவானுக்கு தாமரை மாலை அல்லது மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;
செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;
ராகு பகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;
புதபகவானுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;
சுக்கிரபகவானுக்கு மல்லிகைப்பூமாலையை அணிவிக்க வேண்டும்;
கேதுபகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;
சனிபகவானுக்கு பச்சை அல்லது வாடாமல்லி மாலையை அணிவிக்கவேண்டும்;
குருபகவானுக்கு செவ்வந்தி மாலையை அணிவிக்க வேண்டும்;
எந்த கடவுளுக்கும்,ஜீவசமாதிக்கும் கேந்திப்பூவை ஒருபோதும் அணிவிக்கக்கூடாது;எந்த ஒரு சுபகாரியத்திற்கும் கேந்திப்பூ உகந்தது அல்ல;தமிழ்நாட்டில் பலர் இறை வழிபாட்டிற்கு கேந்திப்பூவை பயன்படுத்தி வருகின்றார்கள்;இது மிகவும் தோஷத்தையும்,கடுமையான பாவத்தையும் நமக்குத் தரும்;
பூமாலையை வாங்கும்போது பேரம் பேசாமல் வாங்க வேண்டும்;

தோஷநிவர்த்திக்கு என்று நவக்கிரகக் கோவிலுக்கோ அல்லது பைரவ சன்னதிக்கோ செல்லும் போது கைப்பட உரிய பூக்களை வாங்கி,தோஷமுள்ளவர் மாலையாக கோர்ப்பது அவசியம்;


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

குரு பெயர்ச்சிப் வழிபாடு

நவக்கிரகங்களில் மிக மிக உயர்ந்த சுபக்கிரகம் குரு;வியாழன்,பொன்னன்,பிரகஸ்பதி,அந்தணன் என்ற பல பெயர்கள் உண்டு;ஒருவரது பிறந்த ஜாதகத்தில் எட்டு கிரகங்கள்  பலம் இழந்திருந்து,குரு பகவான் மட்டும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தால் அவரது வாழ்க்கையில் எந்த ஒரு குறைவும் ஏற்படாது;ஒவ்வொரு நாளும் முன்னேற்றமே உண்டாகும்;அதே சமயம்,ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ஆட்சி அல்லது உச்சம் பெற்று குருபகவான் மட்டும் வலுவிழந்திருந்தால் அவருக்கு வாழ்க்கை,வாழ்க்கையாக இராது.அவ்வளவு சுபக்கிரமாக குருபகவான் இருக்கிறார்.நவக்கிரகங்களில் சூரியனை விடவும் அதிகமான அளவு சுபத்தன்மையைத் தருபவர் குரு;



ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கும் போது பிறந்திருந்தால் அவர் தான் எப்போதும் கவலைப்படாதவராக இருப்பவர்;
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதி அல்லது ராசியை குரு பார்க்கும் போது பிறந்திருந்தால் அவருக்கு ஆயுள் முழுவதும் குருவின் பாதுகாப்பும்,வழிகாட்டுதலும் உண்டு;இதனால்தான் குருபார்க்க கோடி குற்றம் விலகும் என்ற பழமொழி நம்மிடையே உருவானது;

ஜோதிடப்படி வருடக்கிரகங்கள் நான்கு;குரு,சனி,ராகு மற்றும் கேது;இவர்களில் குருவை மட்டுமே முழுச்சுபராக இருக்கிறார்;அதென்ன முழுச்சுபர்?


சனி நமது ராசிக்கு மறைவிடங்களான 3,6,12 ஆம் இடங்களைக் கடக்கும் போது அளவற்ற நன்மைகளைத் தருவார்;அதே சமயம் 1,2,4,7,8 ஆம் இடங்களைக் கடக்கும் போது நன்மைகள் நம்மை வந்து சேருவதைத் தடுக்கவும் செய்வார்;ராகு கேதுக்களும் இதே போலத்தான்;இவர்கள் மூவருமே நல்லவனுக்கு(நல்ல இடத்துக்கு வரும் போது கெட்டதையும்,கெட்ட இடத்துக்கு வரும்போது நல்லதையும்) நல்லவன்;கெட்டவனுக்கு கெட்டவன் என்ற விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்;


குரு அப்படி அல்ல;நல்ல இடங்கள் என்று சொல்லக்கூடிய 2,5,7,9,11 ஆம் இடங்களுக்கு வரும் போது பணப் பழக்கம் அதிகரிக்கும்;திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும்;வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்,சம்பள உயர்வும் தேடி வரும்;படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்;ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியும் தன்மை உண்டாகும்;நகைக்கடை வைத்திருப்பவர்களுக்கு வர்த்தகம் எதிர்பாராதவிதமாக அதிகரித்துக் கொண்டே செல்லும்;
மறைவுஸ்தானங்களான 3,6,8,12 ஆம் இடங்களை குரு கடக்கும் போது நல்லது செய்யமாட்டார்;அதே சமயம் தீமையும் தரமாட்டார்;


13.6.14 வெள்ளிக்கிழமையன்று குருபகவான் மிதுனராசியில் இருந்து கடகராசிக்குப் பெயர்ச்சியாகிறார்;இதன் மூலமாக குரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உச்சமாகிறார்;குரு உச்சமாகும் போது உலகெங்கும் மக்களிடையே ஆன்மீகத்தேடல் அதிகரிக்கும்;இறைவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கையும்,மந்திரஜபம் செய்பவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு பெருகும்;


மேஷராசியினருக்கு வேலை மாற்றம் அல்லது தொழில் மாற்றம் அல்லது வீடு மாற்றம் ஏற்படும்;

ரிஷபராசியினருக்கு படிப்படியாக நற்பலன்கள் குறையத் துவங்கும்;

மிதுனம்,கடகம்,சிம்ம ராசியினருக்கு நீண்டகாலமாக இருந்து வந்த சுபகாரியங்கள் இந்த ஒருவருடத்திற்குள் நடைபெறும்;

கன்னிராசியினருக்கு ஏழரைச்சனியின் பாதிப்பு விலகத்துவங்கும்;

துலாம் ராசியினர் வேலை மாறும் நேரம் இது;
விருச்சிகராசியினர் சகலவிதமான நற்பலன்களையும் பெறுவார்கள்;

தனுசு ராசியினருக்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு மகத்தான நன்மைகள் தேடிவரும்;

மகரராசியினர் அனைத்து சுபத்தன்மைகளையும் பெறுவர்;

கும்பராசியினர் சேமிப்பை அதிகப்படுத்துவது அவசியம்;

மீனராசியினர் அஷ்டமச்சனியின் துயரத்திலிருந்து மீண்டுவிடுவர்;

இந்த குருப்பெயர்ச்சியன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு,கொண்டைக்கடலை மாலை வாங்கிக் கொண்டு,மஞ்சள் நிறப் பூக்கள் அல்லது மஞ்சள் நிறப் பூக்களால் தயாரிக்கப்பட்ட மாலையுடன் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் நவக்கிரக குருவுக்கு இவைகளை சமர்ப்பிக்க வேண்டும்;

தேவானாஞ்சம் ரிஷீணாஞ்சம்
குரு காஞ்சன ஸன்னிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம் 

என்ற குருவின் மூலமந்திரத்தை 27 முறை குருபகவானின் முன்பாக ஜபிக்க வேண்டும்;

அல்லது

நவக்கிரகங்கள் அனைவரையும் ஆசிர்வாதித்து அவர்களை மனிதர்களின் வாழ்க்கையை இயக்க வைத்த ஸ்ரீகாலபைரவப் பெருமானின் மந்திரத்தை 27 முறை ஜபிக்கலாம்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

என்ற இந்த மந்திரத்தை குருபகவானை பார்த்தவாறும்,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களை நினைத்தவாறும் 27 முறை ஜபிக்க வேண்டும்;இதன் மூலமாக குருவின் ஆசிகள் இந்த வருடம் முழுவதும் நமக்குக் கிட்டும்;நமது வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றம் வேண்டுமானால் தகுந்த குரு நிச்சயமாக நமக்கு அமைய வேண்டும்;


தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது;எனவே,நவக்கிரகங்களில் அமைந்திருக்கும் குருபகவானை வழிபட வேண்டும்;
சந்தர்ப்பம் அமைந்தால்,கும்பகோணத்தில் அமைந்திருக்கும் வியாழசோமேஸ்வரர் திருக்கோவிலுக்கு நாளை அல்லது நாளை முதல் 45 நாட்களுக்குள் ஒருமுறை சென்று மூலவரை வழிபட்டு வருவதன் மூலமாக குருவின் அருளைப் பெறலாம்;கும்பகோணத்தில் அமைந்திருக்கும் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் ஆலயமே வியாழசோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்;குருபகவானின் சாபம் தீர்ந்த ஸ்தலம் இது.

ஓம்சிவசக்திஓம்

சதாசிவனின் ஐந்துமுகங்களுக்கான விளக்கம்!

உலகில் எப்போதெல்லாம் சிவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ,அப்போதெல்லாம்  தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும்;என்பதை சைவத்திருமுறைகள் தெரிவிக்கின்றன;

யாரெல்லாம் மூன்று பிறவிகளாக தொடர்ந்து சிவவழிபாடு செய்து வருகிறார்களோ,அவர்களுக்குத்தான் இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குரு அமைவார்;



உலகின் ஆதி மதமான சைவமே தற்காலத்தில் பல்வேறு பெயர்களில்,பல்வேறு வழிபாட்டுமுறைகளாக,பல்வேறு மதங்களாக,பல்வேறு ஆன்மீகப் பாதைகளாக அமைந்திருக்கின்றன;



எந்த நாடுகளில் எல்லாம் மறைமுகமாகக் கூட சிவவழிபாடு நடைபெறவில்லையோ,அந்த நாடுகளில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாத சூழ்நிலையே உண்டாகும்;ஏனெனில்,சிவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது மட்டுமல்ல;சிவனின்றி எந்த ஒரு தேசமும் அமைதியாக வாழ முடியாது;இந்த பேருண்மையை சைவத்திருமுறைகளும்,சீர்காழிபுராணமும்,அருணாச்சல தலவரலாறும் தெரிவிக்கின்றன;



படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற தொழில்களை முறையே பிரம்மாவும்,விஷ்ணுவும்,ருத்ரனும் செய்து வருகிறார்கள்;இவர்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஸ்ரீமஹாகாலபைரவப்பெருமானுக்குரியது;இவரே சதாசிவன் என்ற ஆதிசிவனின் நேரடிப்பிரதிநிதியாக இருந்து ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஆட்சி புரிந்து வருகிறார்;ஸ்ரீமஹாகாலபைரவரும்,ஸ்ரீகாலபைரவரும் ஒருவரே! ஸ்ரீகாலபைரவரும் ஆதிசிவன் என்ற சதாசிவனும் ஒருவரே!!

 

ஐந்தொழில் புரிவதற்காக ஐந்துமுகங்களோடு அருள்பாலித்து வருபவர் சதாசிவன் என்ற ஆதிசிவன்;இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்துடன் திகழ்ந்துவருகிறது;தத்புருஷம்,அகோரம்,ஈசானம்,வாமதேவம், சக்தியோஜாதம் என்பவை இந்த ஐந்து முகங்கள்!



கிழக்கு முகத்தின் பெயர் தத்புருஷம் ஆகும்;இது பொன்னிறத்துடன் அருள்பார்வை பார்த்து வருகிறது;மறைத்தல் தொழிலைச் செய்து வரும் இந்த முகம் சாந்தசுபாவத்துடனும்,கம்பீரத்துடனும்,காளைப்பருவத்துடனும் அமைந்திருக்கிறது.இந்த முகத்தில் இருந்து ரிக் வேதம் உருவானது;



மேற்கு முகத்தின் பெயர் சக்தியோஜாதம்! வெண்மை நிறத்துடன் கூடிய இந்த முகமானது ராஜ அம்சத்துடனும்,அசைவற்ற கண்களுடனும் இருந்து படைத்தல் தொழிலைச் செய்து வருகிறது;சாம வேதம் இந்த முகத்தில் இருந்து தோன்றியது;பல யுகங்களுக்குப் பிறகு,இந்த முகமானது படைப்புக்கொரு கடவுள் தேவை என்று கருதி,அயன் என்ற பிரம்மாவை தோற்றுவித்தது;



மேல்நோக்கிய முகத்தின் பெயர் ஈசானம்!! பளிங்கு நிறத்துடனும் குழந்தைத் தன்மையோடும்,நிர்மலான ஒளியைக் கொண்டதுமாக ஒளிர்ந்து வருகிறது.அருளல் என்னும் தொழிலைச் செய்து வருகிறது.

தெற்குமுகத்தின் பெயர் அகோரம்!! இது கருமை நிறத்துடனும் நெரிக்கும் புருவங்களையும்,பயங்கரமான தோற்றத்தையும் கொண்டு அழித்தல் தொழிலைச் செய்து வருகிறது.யஜீர் வேதத்தை இந்த முகம் உருவாக்கியது;அழித்தலுக்குரிய கடவுளான ருத்ரனை இந்த முகம் தோற்றுவித்தது;



வடக்கு முகத்தின் பெயர் வாமதேவம்!!! சிவப்பு நிறத்துடன் காத்தல் தொழிலைச்  செய்து வருகிறது.பவள நிற ஒளியையும்,அனைவரையும் கவரக்கூடிய பொலிவையும் கொண்டிருக்கிறது.அதர்வண வேதம் இந்த முகத்தில் இருந்து தோன்றியது;காத்தல் தொழிலின் மீது ஈடுபாடு வந்தமையால் ஸ்ரீகாலபைரவப் பெருமான் தொடர்ந்து லிங்க வழிபாடு செய்து,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானாக பதவி உயர்வு பெற்றார்;

 

அட்டவீரட்டானங்களில் திருவதிகையிலும்,இந்தோனோஷியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலிலும் இந்த ஐந்து முக சிவலிங்கத்தைத் தரிசிக்கலாம்;

ஓம்சிவசக்திஓம்

 

பித்ருக்களின் ஆசிகளைத் தரும் ஆடி அமாவாசை(26.7.14சனிக்கிழமை) அன்னதானம்!!!


உலகத்திற்கே மனிதநாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தது நமது தமிழ்நாடுதான்! ஏனெனில்,மனிதன் நாகரீகமடையத் துவங்கி 20,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன;மனித இனம் நாகரீகமடைந்தது இன்றைய இலங்கைக்குத் தெற்கே கடலுக்குள் மூழ்கியிருக்கும் குமரிக்கண்டத்தில் தான்! அன்று முதல் இன்று வரை குலதெய்வத்தை தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் ஒரே மனித இனம் நமது தமிழ் இனம் மட்டுமே!
இறந்த முன்னோர்களே குலதெய்வங்களாக பரிணமித்திருக்கின்றன;இறந்த முன்னோர்கள்  விண்ணில் பித்ருக்கள் உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர்;அவர்கள் பித்ரு தேவதைகள்,எமதர்மராஜா போன்றவர்களின் அனுமதியோடு பூமிக்கு வரும் மூன்று நாட்களில் முதன்மையானது ஆடி அமாவாசை!!அவ்வாறு வருகை தந்து பூமியில் வாழ்ந்து வரும் தனது வம்சாவழியினரில் ஒருவராவது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்களா? என்பதை கவனிப்பார்கள்;
அவ்வாறு யாராவது ஒருவர் செய்தாலும் அதைப்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பரிபூரண ஆசி வழங்குவார்கள்;இந்த ஆசியினால் அந்த குடும்பத்திற்கு அடுத்த ஒரு வருடத்திற்கு வளங்கள் பெருகும்;நலங்கள் அதிகரிக்கும்;அதே சமயம் வர இருக்கும் ஆபத்துக்கள்/விபத்துக்களில் இருந்து பித்ருக்களின் ஆசி தடுத்து காப்பாற்றிவிடும்; ஒரே ஒரு ஆடி அமாவாசை நாளன்று நாம் செய்யும் அன்னதானமானது,பித்ருக்கள் உலகில் வசிப்பவர்களுக்கு ஒரு வருடத்துக்குரிய உணவாகப் போய்ச் சேருகிறது;
ஆடி மாதத்தில் ஆத்மாக் காரகனாகிய சூரியன் சந்திரனின் ராசியான கடகத்தைக் கடந்து கொண்டிருப்பார்;அந்த சூரியனுடன் மனக்காரகனாகிய சந்திரன் ஒன்று சேரும் நாள் தான் ஆடி அமாவாசை ஆகும்;
இந்த நன்னாளில் இல்லறத்தாராகிய நாம் ஒவ்வொருவருமே நமது முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) தர்ப்பணம் செய்ய வேண்டும்;ஒவ்வொருவருமே சிவனடி சேர்ந்த தனது பெற்றோர்களின் நினைவாகவோ அல்லது தாத்தா பாட்டியின் நினைவாகவோ அவர்கள் சிவனடி சேர்ந்த திதியை அறிந்து கொள்ள வேண்டும்;ஒவ்வொரு ஆண்டும் அந்த திதி வரும் நாளில் அவரவர்களுக்கு முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;இன்றைய வேகமான வாழ்க்கையில் ஒருவரே குறைந்த பட்சம் ஆறு பேர்களுக்கு வருடாந்திரத் திதி கொடுப்பது சாத்தியமா?
அம்மாவின் அப்பா,அம்மாவின் அம்மா
அப்பாவின் அப்பா,அப்பாவின் அம்மா
மற்றும்
சிவனடி சேர்ந்த அம்மா,அப்பா
போன்ற எண்ணிக்கையில் திதி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் ஒரு ஆண்டில் ஆறு வெவ்வேறு நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;
இது செய்ய முடியாதவர்கள் நமது ஆன்மீக குருவின் தலைமையில் இது போன்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளவாவது செய்ய வேண்டும்;அப்படி கடந்த வருடங்களில் கலந்து கொண்ட அனைவரது நியாயமான கோரிக்கைகளும் சில நாட்கள்/வாரங்களுக்குள் முன்னோர்களின் ஆசியாலும்,நமது ஆன்மீக குருவின் அருளாசியாலும் நிறைவேறின;பல வாசக,வாசகிகளின் பல ஆண்டு வாழ்வியல் சிக்கல்கள் நிரந்தரமாகத் தீர்ந்தன;வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைத்தன;திருமணத்தடை பலருக்கு நீங்கியது;குழந்தைப் பாக்கியம் வேண்டி வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் புத்திர யோகம் கிடைத்தன;பூர்வீகச் சொத்து சிக்கல்கள் பலருக்கு தீர்ந்தன;இந்த அனுபவங்களை விவரித்தால் அதற்கே தனி வலைப்பூ தேவைப்படும்;

ஜய வருடத்தின் ஆடி அமாவாசைத் திதியானது 26.7.2014 சனிக்கிழமையன்று வருகிறது.இந்த நன்னாளில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நமது ஆன்மீக வழிகாட்டி சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலையில் ஆன்மீக சத்சங்கம் நடைபெற இருக்கிறது;இந்த சத்சங்கத்தின் முடிவில் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் கழுகுமலை கிரிவலமும்,கிரிவலத்தின் நிறைவாக அன்னதானமும் நடைபெற இருக்கிறது.


இந்த ஆடி அமாவாசை பித்ருக்கள் அன்னதான நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளையும் ஆன்மீகக்கடல் குழுமம் அன்போடு அழைக்கிறது;


ஓம்சிவசக்திஓம்
கழுகுமலை வர விரும்புவோர் கவனிக்க:-
தமிழ்நாட்டின் வடக்கே இருந்து வருபவர்கள் மதுரை டூ திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை/ரயில் பாதையில் அமைந்திருக்கும் கோவில்பட்டிக்கு வர வேண்டும்;அங்கிருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்து வழித்தடத்தில் அமைந்திருக்கும் கழுகுமலையை வந்தடையலாம்;பொதிகை எக்ஸ்பிரஸின் மூலமாக பயணிப்பவர்கள் சங்கரன்கோவிலில் இறங்க வேண்டும்;அங்கிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை மார்க்கமாக கழுகுமலையை வந்தடையலாம்;

தமிழ்நாட்டின் தெற்கே இருந்து வருபவர்கள் நாகர்கோவில் டூ மதுரை தேசிய நெடுஞ்சாலை/ரயில் பாதையில் அமைந்திருக்கும் கோவில்பட்டியை வந்தடைந்து,அங்கிருந்து கழுகுமலைக்கு வரலாம்;அல்லது திருநெல்வேலி டூ ராஜபாளையம் வழித்தடத்தில் அமைந்திருக்கும் சங்கரன்கோவிலை வந்தடைய வேண்டும்;அங்கிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை வழியாக கழுகுமலையை வந்தடையலாம்;