RightClick

குலதெய்வத்தின் கருணையும்,பிடி மண்ணின் சானித்தியமும்!!





ஒரு செடி வளர்ந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமானால் அந்தச் செடியை வேருடன் எடுக்க வேண்டும்;அவ்வாறு எடுக்கும் போது கொஞ்சம் தாய் மண்ணையும் பெயர்த்தெடுப்பார்கள்;அந்த மண்ணோடு அந்தச் செடியை நட்டால் தான் செடி வேர் விட்டு வளரும்;இல்லையெனில் பட்டுவிடும் என்பதை நாம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றிவருகிறோம்.

அதுபோலவே,காலச் சுழற்சியின் விளைவாக குடும்பங்கள் வேலை தேடியோ, வேறு காரணங்களாலோ இடம் பெயர்ந்தாலும் குலம் விளங்க,குல தெய்வக் கோவிலைத் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் கட்டிக்கொள்கிறார்கள்.

இது போல குலதெய்வக் கோவிலைக் கட்டும்போது முன்பு ஆதி கோவிலின் வலது பக்கத்தில் சிறிய குழிவெட்டி அதிலிருந்து கைப்பிடி மண் எடுத்து சிவலிங்க வடிவம் அதில் பிடிக்கிறார்கள்.
இந்த மண்ணை அந்தக் குடும்பத்தின் மூத்தவர் தனது கையில் வைத்து அதற்கு சந்தனம்,குங்குமம்,விபூதி இட்டு மாலை அணிவித்து பூஜித்து எடுத்து வருகிறார்கள்.
ஊருக்கு வந்தப் பின் மேளதாளம் முழங்க உற்றார்,உறவினர்,ஊர்ப்பொதுமக்கள் உடன் வர கோவில் கட்டும் இடத்தின் நடுவே சிறிய பள்ளம் வெட்டி,அதில் தாய் மண்ணில் செய்த சிவலிங்கத்தை வைக்கிறார்கள்.பின்னர் அதன் மேல் நவரத்தினங்கள்,தங்கம்,வெள்ளி,நவதானியங்கள் போன்றவற்றை பரப்பி மூடிவிடுகிறார்கள்.
அப்படிச் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றியே குலதெய்வத்தின் பிரதி கோயில் எழுப்பப்படுகிறது.


இதனால் குலதெய்வக்கோவிலுக்குரிய தெய்வீகம் இந்த இடத்திற்கும் ஏற்படுவதாக ஐதீகம்.


நாம் இதுபோல் ஏற்படுத்தப்பட்ட கோவிலைப் பார்க்கிறோம்;அந்த ஊரில் உள்ள கோவிலைப் போல இங்கேயும் இருக்கிறதே என்று எண்ணுகிறோம்.


இப்படித்தான் குலதெய்வக்கோவில்கள் பல உருவாகியிருக்கின்றன;இதனால் நகரம்,மாநகரம் போன்ற ஊர்களில் உள்ள மக்கள்  தங்கள் குலதெய்வ வழிபாட்டை விடாமல் வருடம் தோறும் பின்பற்றிவருகின்றனர்.


தங்களை வாழவைக்கும்,வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் குலதெய்வத்தை வழிபட்டு ஆசிபெறுகின்றனர்;இருந்தும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்கள் சொந்த ஊரில் இருக்கும் மூல குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று அதற்குரிய கொடைவரியைச் செலுத்திக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.


ஒரே ஊரில் இருந்து ஓரிடத்தில் வந்து குடியமர்ந்த மக்கள்,தங்கள் குலதெய்வக் கோவிலை தன்னுடன் அமைத்துக் கொள்ளவும்,வருடம் தோறும் விழா எடுக்கவும் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.
இப்படி புதிய குலதெய்வக் கோவில்கள் உருவாதை பக்தர்களிடம் கருணை கொண்ட குலதெய்வம் அருளுகிறார் என்பதும் ஐதீகம்.
இப்படி பக்தர்களிடம் பக்திக்கு குலதெய்வம் கட்டுப்பட்ட வரலாறு ஏராளமாக நமது நாட்டில் இருக்கின்றன.


ஆதாரம்:பசுத்தாய் பொங்கல் மலர் பக்கம் 163,கர வருட வெளியீடு-2012
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ