RightClick

"நூலகம் அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும்"



திருப்பூர்: "நூலகங்கள் அழிந்தால், நாட்டின் கலாசாரம், பண்பாடு, மொழி அனைத்துமே அழிந்துவிடும். எனவே, நூலகங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்" என முன்னாள் நீதிபதி சந்துரு பேசினார்.

பின்னல் புக் டிரஸ்ட், சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய புத்தக திருவிழா, திருப்பூர் கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நடந்தது. விழாவில் ஒரு பகுதியாக நடந்த கருத்தரங்கில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:

கர்நாடகாவில் சிறந்த எழுத்தாளர் மறைந்தபோது, அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழகத்திலும், எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற மனப்போக்கு வளரவில்லை. "தமிழ் வாழ்க" என போர்டு வைத்தால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது; தமிழ் அறிஞர்களை போற்றி பாதுகாத்தால் மட்டுமே தமிழ் வாழும்.
சென்னையில் சமீபத்தில் ஐந்து நாள் பொங்கல் விழா, 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடந்தது. பொங்கல் விழாவை முன்னிட்டு "டாஸ்மாக்" மதுக்கடை விற்பனை 600 கோடி ரூபாயை எட்டியது; அதேநேரம், புத்தக விற்பனை 6 கோடி ரூபாயை மட்டுமே எட்டியது.

புத்தகங்களை படித்தால் மட்டுமே மனிதன் அறிவை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். அறிவு விரிவானால், சிந்தனை மேலோங்கும். அக்காலங்களில், தாத்தா, பாட்டி போன்றோரெல்லாம், நல்ல கதை சொல்லிகளாக இருந்தனர். 


மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதோடு, அவர்களுடன் பெற்றோர் அமர்ந்து, படிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
கிராமங்கள்தோறும் நூலகங்கள் ஏற்படுத்தி, புத்தகங்கள் வாங்க பல லட்சம் ரூபாய் வரி வசூலிக்கின்றனர். அத்தொகையில், புத்தகங்கள் வாங்கி வைப்பதில்லை; பொதுமக்களும் கண்டுகொள்வது இல்லை. ஆட்சி மாற்றங்களும் நூலகங்களை பாதிக்கின்றன.


சென்னை அறிவாலயத்தில் உள்ள நூலகம், மருத்துவமனையாக மாற்றப்படுகிறது; இது சரியில்லை. ஒரு நாட்டை அழிப்பதற்கு முதலில், அந்த நாடுகளில் உள்ள நூலகங்களையே அழிக்கின்றனர். நூலகங்கள் அழிந்தால், மக்களின் கலாசாரம், பண்பாடு, மொழி அனைத்துமே அழிந்து விடும். அதனால், நூலகங்களை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம்.
நீதிபதியாக இருந்த போது ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜாதிக்கு தனித்தனியே மயானம் வேண்டும் என்று வாதிட்டனர். ஜாதிக்கென்று தனித்தனியே இடம் ஒதுக்க முடியாது. முதலில் யாருடைய உடல் வருகிறதோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தேன். "சமரசம் உலாவும் இடமே" என்ற பாடல் வரியையும் எழுதினேன். வாழும்போது வேறுபாடு இருந்தாலும், போகும் போதாவது எல்லோரும் ஒன்றாக போகலாமே. இவ்வாறு அவர் பேசினார்.