RightClick

பாடல் பெற்ற சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்களும் மருத்துவக் குணங்களும்



பாடல் பெற்ற சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்களும் மருத்துவக் குணங்களும் -மு.அண்ணாஜோதி; பக்.400; விலை.ரூ.300; சந்தனத் தென்றல் பதிப்பகம், 105, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை-69.


சிவாலயங்களில் உள்ள தல மரங்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியுள்ள நூல். தகவல்களைத் திரட்டுவதற்காக, தேவார மூவர்களால் பாடல் பெற்ற 276 தலங்களுக்கும் சென்றிருக்கிறார் நூலாசிரியர். சேகரித்த தகவல்களுடன், சித்தர்களின் மேற்கோள்களையும் திறம்பட இணைத்து ஆசிரியர் விளக்கி இருப்பது அரும்பணி. அத்தலங்களுக்கான தாவரங்கள் மற்றும் மரங்களின் அனைத்து உறுப்புகளின் மருத்துவ குணங்கள் கூறப்பட்டுள்ளன. பாடல் பெற்ற கோயில்களில் தல விருட்சங்கள் அமைந்த வரலாறு, நிகழ்வுகள் குறித்தும் ஆசிரியர் பயணக் கட்டுரை போல விவரித்துள்ளார். தலவிருட்சங்களின் பெயரிலேயே தலங்களும் அமைந்துள்ள தகவல்கள் சுவைபடத் தெரிவிக்கப்பட்டுள்ளன.


புளி, வாழை, வெற்றிலை, தில்லை, கள்ளி, ஆண் பனை உள்ளிட்ட 86 வகை மரங்களும், தாவரங்களும் இந்தத் தலங்களை அலங்கரித்து வருகின்றன; பெருமை சேர்த்துள்ளன. வைணவர்களால் போற்றப்படும் துளசி, திருவிற்குடி தலத்தின் விருட்சமாக இருக்கிறது போன்ற அரிய தகவல்களை அளித்திருக்கிறது இந்தப் புத்தகம். தலமரங்களையும் தாவரங்களையும் பேணிக் காக்க வேண்டியது நமது கடமை என்கிறார் ஆசிரியர். சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் மருத்துவ வழிகாட்டியாக வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இது.நன்றி:தினமணி 10.2.14