RightClick

கிரிவலப்பாதைக்கு ஒளி தந்த ரஜினிகாந்த்!!!





1997 ஆம் ஆண்டு திரு அண்ணாமலையில் மாவட்ட உதவி ஆட்சியராக இருந்தவர் சிவசூரியன்! திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 148 சோடியம் ஆவி விளக்குகள் பொருத்த வேண்டும் எனவும்,அதற்கு உதவ வேண்டும் எனவும் சூப்பர் ஸ்டாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு விளக்கிற்கு எத்தனை செலவாகும்? என்று சூப்பர்ஸ்டார் அந்த அதிகாரியிடம் கேட்க,அவர் அதற்கு ஏதோ ஒரு தொகையைக் கூறியிருக்கிறார். ‘சரி என் கணக்காக ரூ.50,000/-வைத்துக் கொள்ளுங்கள்’ என்ரு வாக்கு கொடுத்திருக்கிறார்.அதற்கு அந்த அதிகாரியும் ஒப்புக்கொண்டார்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் முழுவதும் சூப்பர் ஸ்டாருக்கு கிரிவலப்பாதை பற்றிய சிந்தனை மட்டுமே மேலோங்கியிருந்தது.
“பல கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட கிரிவலப்பாதைக்கு எப்படி ஒரு விளக்கு போதுமானதாக இருக்கும்?ரூ.50,000/-எப்படி போதுமானதாக இருக்கும்?பாதை நெடுக விளக்கு நிறுவினால் தானே பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்?”என்ற எண்ணம் சூப்பர்ஸ்டாருக்கு வந்திருக்கிறது.
மூன்றாம் நாள்,அந்த அதிகாரி சிவசூரியனை போனில் அழைத்திருக்கிறார் சூப்பர்ஸ்டார். “மொத்தகிரிவலப்பாதைக்கும் விளக்குகள் பொறுத்துவதாக இருந்தால் எவ்வளவு செலவாகும்?”என்று கேட்க,அந்த அதிகாரிசிவசூரியன், “இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள்;கணக்கிட்டுச் சொல்கிறேன்”என்று பதிலளித்தார்.

இரண்டு நாட்களில் 148 சோடியம் ஆவி விளக்குகள் கிரிவலப்பாதை முழுவதும் பொருத்த பத்து லட்ச ரூபாய் ஆகும் என்று மதிப்பிட்டு சூப்பர் ஸ்டாரிடம் அந்த அதிகாரி சிவசூரியன் தெரிவித்திருக்கிறார்.
உடனே தயங்காது, அந்த பத்து லட்சம் ரூபாயையும் நானே தருகிறேன்;மொத்தகிரிவலப்பாதைக்கும் விளக்குகள் பொருத்திவிடுங்கள் என்று சூப்பர் ஸ்டார் உறுதியளித்தார்.அப்போது அந்த அதிகாரி சிவசூரியன், ‘உங்களிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும்’என்றார். “என்ன சொல்லுங்க?” என கேட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

‘பக்தர்கள் வசதிக்கு கிரிவலப்பாதையில் விளக்குகள் பொருத்த வேண்டும் என்று நான் முடிவு செய்ததும்,நேரே யோகி ராம் சுரத்குமாரிடம் போய், ‘கிரிவலப்பாதையில் விளக்குகள் பொருத்த நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்;அதற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவாகும்;அதற்காக பலரிடம் நான் யாசகம் கேட்கப் போகிறேன்.அதற்கு உங்களின் ஆசிர்வாதம் வேண்டும்.நன்கொடையாளர்கள் தாராளமாக நிதியுதவி தரவேண்டும் என நீங்கள் ஆசி கூறவேண்டும்’என வேண்டினேன்.

அதற்கு யோகிராம் சுரத்குமார் “எதற்கு எல்லோரிடமும் போய் நிற்கவேண்டும்?சூப்பர் ஸ்டார் தருவார்” என்றார்.அதற்குப் பிறகு உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.நீங்கள் ரூ.50,000/-தருகிறேன் என்று சொன்னதும் அமைதியாகிவிட்டேன்.மற்றவேலைகளில் மூழ்கிவிட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து நீங்களாகவே தொடர்பு கொண்டு மொத்தச் செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியதும்,எனக்கு ஆச்சரியமாக இருந்தது.யோகிராம் சுரத்குமார் கூறியபடி வேறு எவருடைய தயவும் இல்லாமல் உங்களின் தயவிலேயே அனைத்தும் நடந்துமுடிந்திருக்கிறது.

யோகிராம் சுரத்குமார் முக்காலும் உணர்ந்த ஞானி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை;இவ்வாறு அந்த அதிகாரி சிவசூரியன் கூற,அனைத்தையும் கேட்ட ரஜினிகாந்த் யோகிராம்சுரத்குமாரையும்,அண்ணாமலையாரையும் எண்ணி மனதார வணங்கியிருக்கிறார்.

‘நான் யோகிராம்சுரத்குமாரை நேரில் சந்தித்ததில்லை;அப்படியிருக்கும்போது அவர் என்னைப் பற்றி பேசியிருப்பதே எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம்’ என்று பின்னாளில் பாலகுமாரனிடம் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு பெரிய ஆன்மீக அனுபவம் பெற்ற ரஜினிகாந்த் இந்த சம்பவத்தை எவரிடமும் சொன்னதேயில்லை;இதேபோலத்தான்,நாமும் நாம் செய்யும் ஆன்மீக அன்பளிப்புகள்,வழிபாடுகளை எப்போதும் ரகசியமாக வைத்துக் கொள்வது நமது கடமைகளில் ஒன்று.

நன்றி:மாலைமலர்,ரஜினிபிறந்தநாள் சிறப்புமலர்,பக்கம்30,        வெளியீடு 12.12.13.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ