RightClick

அபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை!!!







1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை (தொடர்ந்து மூன்று மார்கழி பவுர்ணமிகளில் இந்த பவுர்ணமியே இறுதியான பவுர்ணமி!!!) கழுகாச்சலமூர்த்தி ஆலயத்திற்கு 18 சித்தர்களும் சூட்சுமமாக குறிப்பிட்ட நேரத்தில் வருகை தருவர்;வருகை தந்து,கழுகுமலை கிரிவலம் செல்வர்;அதே நேரத்தில் நாமும் கிரிவலம் சென்றாலே நமது நீண்டகால சிக்கல்கள்/பிரச்னைகள் தீரும் என்பதை இந்த உலகிற்கு முதன் முதலில் தெரிவித்தவர் நமது ஆன்மீக வழிகாட்டி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களே!

இன்று 16.12.2013 திங்கட்கிழமை(ரோகிணி நட்சத்திரமும்,மார்கழி மாதத்தின் முதல் நாளும்,மார்கழி மாத பவுர்ணமியும் கூடி வந்திருக்கிறது) அன்று மதியம் 1.01 நிமிடத்திற்கு மார்கழி மாத பவுர்ணமி திதி உதயமானது;சரியாக 2.01 நிமிடத்திற்கு ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தமது தொண்டர்கள் புடைசூழ கழுகாச்சலமூர்த்தி கோவிலுக்கு வருகை தந்தார்.

இந்த கிரிவலத்தில் மறைந்திருக்கும் சித்தர் ரகசியம் என்ன? இந்த கிரிவலத்தில் கலந்து கொள்வதால் நமக்கு கிடைக்கும் இறை ஆசி,சித்தர்கள் தரிசனம் பற்றி தெரிவித்தார்;கூடவே,வந்திருந்த பலருக்கு இருக்கும் கடன் பிரச்னைகள் தீர நமக்கு நாமே செய்ய வேண்டிய பைரவப் பரிகாரத்தை விவரித்தார்;குழந்தையின்மையால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருக்கும் தம்பதியர் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை எடுத்துரைத்தார்;(வெகு விரைவில் ஐயாவின் பேச்சு,ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் இரண்டிலும் வெளிவரும்)

பிறகு வந்திருந்த ஒவ்வொருவருக்குமே ருத்ராட்ச தானம் செய்தார்;அவ்வாறு ருத்ராட்சங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 3000 பேர்களுக்கும் மேல்!!

சரியாக மதியம் 3.00 மணிக்கு கழுகாச்சலமூர்த்தியின் ஆலயத்தின் வாசலில் இருந்து  கிரிவலம் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் புறப்பட்டது;3.10க்கு கிரிவலப்பாதையில் அமைந்திருந்த மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியைச் சென்றடைந்தது;வந்திருந்த ஒவ்வொருவருக்கும் மிளகாய்ப் பழசித்தர் ஜீவசமாதியில் செய்யப்பட்ட யாக தண்ணீர் தெளித்தார்;இதன் மூலமாக ஏழு தலைமுறையாகவும்,ஏழு பிறவிகளாகவும் இருந்து வந்த கர்மவினைகள் நீங்கின;பிறகு,வந்திருந்த ஒவ்வொருவருக்குமே பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டன;கிரிவலம் ஆரம்பமாகும் முன்பு ருத்ராட்சங்கள் வாங்காதவர்களுக்கு மிளகாய்ப்பழ சித்தரின் ஜீவசமாதியில் ருத்ராட்சங்கள் வழங்கப்பட்டன;

அங்கிருந்து புறப்பட்டு கிரிவலப் பாதையில் இருந்த நீர்நிலைகளில் ஐயாவின் கைகளால் நவதானியங்கள் எடுத்துத் தர,ஒவ்வொருவராக நவதானியங்களை இருகைகளில் வைத்துக் கொண்டு மனப்பூர்வமாக வேண்டியப்பின்னர்,நீர்நிலைகளில் தூவினர்;இது போல இரண்டு இடங்களில் நவதானியங்களும்,டயமண்டு கல்கண்டுகளும் தூவப்பட்டன;

இந்த 18 சித்தர்களும் ஒன்றாக வரும் கழுகுமலை கிரிவல நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும்,தென் மாநிலங்களில் இருந்தும்,டெல்லி,மும்பை,தென் கிழக்கு ஆசிய நாடுகள்,வட மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்;கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டும்.

முடிவாக,1000 பக்தர்களுக்கு குடிநீருடன் கூடிய அன்னதானம் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை ஆன்மீகக்கடல் தொண்டர்கள் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்திருந்தனர்.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ