RightClick

கோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்படுவரா? தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழக கோவில்களின் திருப்பணிகளில், பல்வேறு வரலாற்று சான்றுகளான, கல்வெட்டு, ஓவியம் போன்றவை சிதைக்கப்படுவதால், அவற்றை முறையாக பராமரிக்க, தொல்லியல் வல்லுனர்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வருவாய் அடிப்படை:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், தமிழகத்தில், 38,444 கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள், மாத வருவாயின் அடிப்படையில் பிரிக்கப்படுள்ளன. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல், ஆண்டு வருமானம் வருகிறது. தமிழகத்தில் உள்ள மிக முக்கிய கோவில்கள், இப்பட்டியலில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 200க்கும் மேற்பட்ட கோவில்களில், குடமுழுக்கு நடத்தப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 500க்கும் மேற்பட்ட கோவில்களில், சீரமைப்புப் பணி நடக்கும். அக்கோவில்களில், வரலாற்றுச் சிறப்பு பெற்ற கல்வெட்டுகள், ஓவியங்கள் போன்றவை, போதிய அக்கறையின்றி சிதைக்கப்படுவதாக, குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நடந்த திருப்பணியில், அங்குள்ள கல்வெட்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இது தொல்லியல் ஆர்வலர்களையும், பக்தர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சீரமைப்புப் பணி:

கடந்த சட்டசபை கூட்டத்தில், "இந்து சமய அறநிலையத் துறையின் கோவில்களில், சீரமைப்புப் பணி மேற்கொள்ள, தொல்லியல் பாதுகாப்புப் பணியில் அனுபவம் நிறைந்த, தொல்லியல் வல்லுனர் ஒருவர், ஆலோசகராக நியமனம் செய்யப்படுவார்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில், நூற்றுக்கணக்கான கோவில்களில், சீரமைப்புப் பணி நடந்து வரும் போது, தனி ஒரு வல்லுனரால் அனைத்து, கோவில்களிலும் ஆய்வு செய்து, முறையான ஆலோசனை வழங்குவது, நடைமுறையில் சாத்தியமில்லாதது. இதற்கென, ஐந்து பேர் கொண்ட, தனிக்குழு அமைத்தாலும், பணிகள் முழுமை பெறாது. மாறாக கிடப்பில் போடப்படும் அபாயம் உள்ளது.

தன்னார்வ தொண்டர்கள்:

தொல்லியல் துறை தொடர்பான நடவடிக்கைகளில், "ரீச்' போன்ற அமைப்புகள், தன்னலமின்றி செயல்பட்டு வருகின்றன. எனவே, தொல்லியல் துறையின் மீதும், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில், செயல்படும் தன்னார்வ தொண்டர்களை, இதில், ஈடுபடுத்தினால், அரசின் நோக்கம் நிறைவேறும். மேலும், முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் இதில், இணைத்தால், பெரும்பாலான கோவில்களில் காணப்படும் வரலாற்று கலைகள் காக்கப்படும்.

- நமது நிருபர் -

Click Here
நன்றி:தினமலர்