RightClick

பவுர்ணமி இரவில்(22/7/13) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவ வழிபாடு செய்வோம்!!!




தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணார்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,நமது பணம் சார்ந்தபிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் நமக்குப் போதித்திருக்கிறார்.அவருக்கு ஆத்மார்த்தமான நன்றிகளோடு இந்தப்பதிவினை பின்பற்றத் துவங்குவோம்.

வீட்டிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்து வருபவர்கள்,தொடர்ந்து ஒரு வருடம் வரை அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்;தமிழ்ப் பண்பாட்டின் அடையாளத்தைக் கைவிடாமல் இருக்க வேண்டும்;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் போட்டோவை வாங்கி வடக்கு நோக்கி வீட்டில் வைத்து துர்க்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை 27 முறை பாட வேண்டும்;

தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
    தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
   மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்
 

முழுநிலவதனில் முறையோடு பூசைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்
 

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
 தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
     தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
    வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
   யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
  மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
  வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
   செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்.

இவ்வாறு தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகள் வழிபாடு செய்ய வேண்டும்.ஒன்பதாவது பவுர்ணமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு படையலாக அவல் பாயாசம் தயார் செய்து படையலிட வேண்டும்.வழிபாட்டின் முடிவாக அவல் பாயாசத்தை பாதி எடுத்து நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ள வற்றாத செல்வச் செழிப்பை அடையலாம்.


ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் போட்டோவை விலைக்கு வாங்குபவர்களுக்கு வீட்டிலேயே வழிபடும் முறையும் அனுப்பி வைக்கப்படுகிறது;

இந்த வழிபாட்டுமுறையை எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாகப் பின்பற்றுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அபரிதமான செல்வ வளம் உண்டாகிறது;கடுமையான கர்மவினைகள் இருப்பவர்களுக்கு முதலில் படிப்படியாக கடன் நீங்கத் துவங்குகிறது;அல்லது வராக்கடன் வசூலாகிறது;தொழில் வளர்ச்சி படிப்படியாக ஏற்படுகிறது;நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவடைகின்றன;

ஏற்கனவே,ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வருபவர்கள் அத்துடன் சேர்த்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடும் வீட்டில் செய்து வரலாம்;


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ