RightClick

மனித நேயம் தெரியும். அதென்ன பாம்பு நேயம்?


மதுரை அருகில் ஒரு மலைப்பகுதியில் சாலையை செப்பனிடும் பணி நடைபெறுகிறது.அச்சமயத்தில்  ஒரு நல்ல பாம்பு ரோடு போடும் போது பயன்படுத்தப்படும் ஜே.சி.பி.இயந்திரத்தில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டு,வயிறு கிழிந்து,குடல் வெளியே வந்து சாலை ஓரமாக குற்றுயிராகக் கிடக்கிறது.

அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞன் அந்த பாம்பினைப்பார்த்து மனம் இரங்குகிறான்.பைக்கை விட்டு இறங்கி அந்தப் பாம்பினை எடுத்து ஒரு பாலிதீன் பையில் போட்டு 18 கி.மீ.தூரத்தில் இருக்கும் கால்நடை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று பாம்பை காப்பாற்ற வேண்டுகிறான்.

‘இதுவரை இங்கு பாம்புக்கு சிகிச்சை செய்தது இல்லை;பாம்புக்கு சிகிச்சை செய்ய வேண்டுமானால் வன இலாகா அதிகாரியின் கடிதம் வேண்டும்’என டாக்டர் சொன்னார்.மனம் சலிக்காத அந்த இளைஞன் அங்கிருந்து 32 கி.மீ.தூரத்துக்குப் பயணித்து அங்கிருக்கும் வன இலாகா அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று,நிலைமையை விளக்குகிறான்.

இளைஞனை வினோதமாகப் பார்த்த வன இலாகா அதிகாரிகள் அனுமதி கொடுக்கின்றனர்.

மீண்டும் கால்நடை ஆஸ்பத்திரிக்கு வந்து அனுமதிக்கடிதத்தை டாக்டரிடம்,கொடுத்தவுடன் பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நல்ல பாம்பு குணமாக 3 நாட்கள் ஆகும்.ஆனால் இங்கே வைத்து பராமரிக்க முடியாது என்று டாக்டர் மறுத்துவிட்டார்.
அந்தப்பாம்பை ஒரு கூடையில் வைத்து தன் வீட்டுக்கு கொண்டுபோய் வைத்திருந்து,அது குணமானவுடன் காட்டில் கொண்டு போய் விட்டு நிம்மதியுடன் திரும்புகிறான் அந்த இளைஞன்.

நீங்க இந்த இளைஞனைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

நன்றி:விஜயபாரதம்,பக்கம் 4,வெளியீடு 13.4.12