RightClick

ஈரோடு நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு!!!


ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து மாதக்கணக்கில் தங்கவேண்டிய சூழ்நிலையில் உள்ள ஏழை கிராமப்புற பிணியாளர்களும் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் உறவினர்களும் யார் யார் என்று பார்த்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.சாப்பாட்டுவேளையில் அந்த டோக்கனுக்கு ‘ஏ.எம்.ஹோம்லி மெஸ்’ ஒரு ரூபாய்க்கு சாப்பாடு போடுகிறது.ஒரு பிணியாளர் இதுபோல ஆறு மாதகாலமாக ஒரு  ரூபாய் சாப்பாட்டில் உயிர் வாழ்ந்து வருகிறார்.இந்தப் புண்ணியச் செயலை கடந்த 4 ஆண்டுகளாகச் செய்து வருபவர் ஹோம்லி மெஸ் நடத்தும் திரு.வி.வெங்கட்ராமன்(வயது 49).இது தவிர மெஸ்ஸில் சாப்பிட வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பில்லில் 20% தள்ளுபடியும் அளிக்கிறார்.இவரது நல்ல மனது கண்டு ஒரு  புகழ்பெற்ற மடத்தின் துறவி,இவரது மகள் சென்னையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இலவச சீட் பெற உறுதுணை புரிந்தார்.நல்லது செய்பவர்களுக்கு நல்லதே நடக்கிறது என்றாலும் இந்த விலைவாசியில் வெங்கட்ராமன் செய்வது நிஜமான தொண்டே!!!

குஜராத்தில் பசி தீர்க்கும் மாநில அளவிலான ஹெல்ப்லைன்!!!

பாரதத்திலேயே முதல்முறையாக பட்டினியால் வாடுபவர்கள் தொடர்புகொள்வதற்காக தொலைபேசி சேவையை தன்னார்வ தொண்டுநிறுவனங்களுடன் இணைந்து குஜராத் அரசு துவங்கியுள்ளது.வருடம் முழுவதும் நிலநடுக்கம்,வெள்ளம் போன்ற இயற்கைப்பேரிடர் ஏற்படும்போதும், மற்ற சாதாரண நாட்களிலும் பசித்திருப்போருக்காக இந்த தொலைபேசி சேவை அமைப்பு,அன்னதானம் செய்யும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.இந்த  திட்டம் பரீட்சார்த்தமாக சூரத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.இங்கு ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கிடும் 30 அமைப்புகள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.நகரில் உணவுத்தேவைப்படும் ஒருவர்,இந்த அமைப்புக்களை தொடர்பு கொண்டால்,அருகிலேயே இலவசமாக அவர்களுக்கு உணவு கிடைக்கும் இடம் எது  என்று அவருக்கு வழி சொல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண் மூலம் தொடர்பு கொண்டால் அது பட்டினியில் வாடுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி சேவை அமைப்பை அடையும்.அங்கிருக்கும் வரவேற்பாளர் அழைப்பவர் இருக்கும் இடத்திற்கு அருகில் ஆதரவற்றோர்களுக்கான எந்த அமைப்பு உள்ளது என்று தகவல் கொடுப்பார் என திட்ட அதிகாரி கூறியிருக்கிறார்.

த டைம்ஸ் ஆப் இந்தியா 11.10.2006
மற்றும் விஜயபாரதம் பக்கம் 6, 20.4.2012